கொரானா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் மறைக்கப்படுகிறதா என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
‘தமிழ்நாட்டில் கொரானாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதாகவும் அதைக் குறைத்துக் காட்டும்படி மாவட்ட மருத்துவமனைகளுக்கு வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் வருகிற செய்திகள் உண்மைதானா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
கொரானா பேரிடர் முழு அடைப்புக் காலத்தை மத்திய, மாநில அரசுகள் உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதனால் உலக அளவில் இந்தியா 6- இடத்துக்கு வந்துவிட்டது. இந்தியாவில் கொரானா நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டது.
இந்நிலையில் எல்லாக் கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து தமிழக அரசு தளர்த்தி வருகிறது. இதனால் நோய்ப் பரவல் வெகுவேகமாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. சென்னையில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கண்டறியப்பட்டு வருவது கவலை அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.