தமிழகத்தையே உலுக்கிய கொலையில், A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சங்கரும், திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்த கவுசல்யாவும் காதலித்து 2015 ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்திற்கு கவுசல்யாவின் குடும்பத்தினர் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் சாலையில் பட்டப்பகலில் மனைவி கவுசல்யாவுடன் சென்ற சங்கர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக உடுமலைபேட்டை காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கவுசல்யாவின் குடும்பத்தினர் ஏற்பாட்டில் தான் ஆணவ படுகொலை சம்பவம் நடத்தப்பட்டது தெரிய வந்தது.
தமிழகத்தையே உலுக்கிய உடுமலை சங்கர் வழக்கில், மேல் முறையீட்டு மனுக்கள் மீது இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்ப்புடைய 5 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து நடிகரும், மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுகளின் அடையாளம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை. தமிழகத்தையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு?” என்று குறிப்பிட்டுள்ளார்.