சிறையில் தந்தை – மகன் உயிரிழந்த சம்பவத்தில், உண்மையை மறைக்கும் முதல்வர், எப்படி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பார் என்று திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததற்காக ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும், மர்ம\மான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாகவே, இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழக முதல்வர், சிறையில் இருந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததாக குறிப்பிட்டிருந்தார். மேலும் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் என 20 லட்ச ரூபாய் நிவாரணத்தொகையாக வழங்கப்படும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில் “ கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவு காரணமாகவும், மகன் பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்ததாக முதல்வர் கூறுகிறார். இன்னும் உடற்கூராய்வு முடிய வில்லை. அதற்குள் பழனிசாமி அவர்களுக்கு இறப்பின் காரணம் எப்படி தெரிந்தது?
வன்முறைதான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெளிவாகத் தெரிந்தும், உண்மைக்கு புறம்பாக பேசும் முதல்வர் கொலைக்கு காரணமான காவல்துறையினர் மீது எப்படி உரிய நடவடிக்கை எடுப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.