சசிகலா வரும் ஆகஸ்ட் மாதம் சிறையில் இருந்து விடுதலையாகக் கூடும் என்ற தகவல் வெளியான நிலையில், கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து இவர்கள் மூவரும் கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் தண்டனை காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகக் கூடும் என்று அவ்வப்போது தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் சசிகலா வரும் ஆகஸ்ட் மாதம் சிறையில் இருந்து விடுதலையாகக் கூடும் என்று தகவல்கள் வெளியானது. பாஜகவின் ஆசீர்வாத் ஆச்சாரி நேற்று இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் பதிவில் “ பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து, வரும் ஆகஸ்ட் மாதம் விடுதலையாக வாய்ப்புள்ளது.” என்று குறிப்பிட்டிருந்தார். சசிகலா சிறையில் இருந்து விடுதலையானவுடன், அவர் அதிமுகவில் இணையக்கூடும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், சசிகலா விடுதலை குறித்த செய்தி தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் கர்நாடகா சிறைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விளக்கமளித்துள்ளனர். அதாவது, சுதந்திர தினத்தை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலையாவோர் பட்டியலில் சசிகலாவில் பெயர் இல்லை என்று தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்துக்கு முன் விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ள 65 பேரின் பெயர் பட்டியலிடப்பட்டதாகவும், அதில் சசிகலாவின் பெயர் இடம்பெறவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு இன்னும் 6 மாத தண்டனை உள்ளதால், முன் கூட்டியே விடுவிப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை என்றும் கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.