கரூர் வேலாயுதம்பாளையம் அருகே சலூன் வைத்துள்ள 80 வயதான தங்கவேல் விராட் கோலி போல கட்டிங் செய்து அசத்தி வருகிறார்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 80). பள்ளி பருவ நாட்களிலேயே தந்தையை இழந்த இவர், குடும்பத்தை காப்பாற்ற அவரது மாமாவின் சலூன் கடையில் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து கடின உழைப்பினால் 1960ம் ஆண்டு அவரது 19-வது வயதில் சொந்தமாக சலூன் கடையை தொடங்கினார். தற்போது 80 வயதானாலும், இவரின் கஸ்டமர்கள் பெரும்பாலும் இளைஞர்களே. இந்த காலத்து ட்ரெண்டுக்கு ஏற்றார்போல, நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களை போல அவர்களுக்கு கட்டிங் செய்து அசத்தி வருகிறார். குறிப்பாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி போல முடி வெட்டுவதில் இவர் மிக கெட்டிக்காரர்.
இதுகுறித்து அவர் குறியதாவது, “60 ஆண்டுகளாக முடி திருத்தும் தொழில் செய்து வரும் நான் இதுவரை எனது கடையை பூட்டியதே இல்லை. முதன்முறையாக கொரோனா ஊரடங்கால் கடையை 60 நாட்களாக பூட்டியிருந்தேன். தற்போது தளர்வு அறிவிக்கப்பட்டதால் மீண்டும் கடையை திறந்து தொழில் செய்து வருகிறேன்.
இந்த 60 நாட்கள் கடை அடைக்கப்பட்டாலும் எனது தொழில் ஆர்வம் குறையவில்லை. கடையில் கிருமி நாசினியாக மஞ்சள் நீர் தெளித்து, வேப்பிலையை பயன்படுத்துகிறேன். கிரிக்கெட் வீரர் விராட் கோலி கட்டிங்கிற்கு இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். 80 வயது ஆனாலும் இதுவரை எனக்கு தொழிலில் கைநடுக்கம் ஏற்பட்டது கிடையாது. இறுதி மூச்சு உள்ள வரை இந்த தொழிலை ஈடுபாட்டுடன் செய்வேன். எனக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.