திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்திற்கு வந்த கடத்தல் தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரியான
ஸ்வப்னா சுரேஷ்
முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் சமீபத்தில் அங்குள்ள சரக்கு முனையத்தில் இருந்து கடத்தல் தங்கத்தினைக் கைப்பற்றியுள்ளனர்.
அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், சில நாட்களுக்கு முன்னதாக சரக்கு விமானம் ஒன்றின் மூலமாக திருவனந்தபுர விமான நிலையத்தினை வந்தடைந்து அதிகாரிகளால் விடுவிக்கப்படுவதற்காக சரக்கு முனையத்தில் காத்திருப்பில் இருந்த பெட்டகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த சோதனையில் சிக்கிய தங்கத்தின் மதிப்பு சுமார் 30 கிலோ என்று தெரிவிக்கப்படுகிறது.

விசாரணையில் அந்தப் பெட்டகமானது துபாயில் இருந்து வந்துள்ளது என்பதும், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்திற்கு அனுப்பட்டுள்ளது என்பதும் சுங்க அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த நிலையில், அந்த பெட்டகத்தை பெற்றுக் கொள்ள வந்த ஸரித் என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போதுதான், அவர் ஐக்கிய அரபு அமீரக தூதரக முன்னாள் ஊழியர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்டதாக ஸரித் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பிறகும், அவர் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததும், தூதரகத்தின் பெயரில் ஏராளமான தங்கத்தை கேரளத்துக்குள் கடத்தி வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
சுவப்னாவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றியவர். அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேறிய பிறகும் கூட, இந்த கடத்தலுக்கு உதவியுள்ளார். இந்த கடத்தலில் அவரது தொடர்பு சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரக ஊழியர்களுக்கு வரும் உடைமைகளுடன், இதுபோன்ற கடத்தல் தங்கத்தையும், தூதரகத்தின் பெயரில் அனுப்பி முறைகேடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் சுவப்னா வகித்து வந்த பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருப்பதாகவும், அவர் ஒப்பந்தப் பணியாளர் மட்டுமே என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.