கேரளாவில் நாயின் வாய்பகுதி 2 வாரங்களாக டேப் கொண்டு அடைக்கப்பட்டதால் நாய் உணவின்றி தவித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிபொருள் நிரம்பிய பழத்தை சாப்பிட்டதால், வாயில் படுகாயமடைந்து உயிரிழந்தது. இந்த துயர சம்பவத்தின் வடு ஆறுவதற்குள் கேரளாவில் மற்றோரு விலங்குக்கு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன் திருச்சூர் விலங்குகள் நல அமைப்புக்கு வந்த செல்போன் அழைப்பில், ஒல்லூர் பகுதியில் தெருநாய் ஒன்றின் வாயில் யாரோ டேப் ஓட்டி விட்டுள்ளதால், அதனால் சாப்பிட முடியாமல் தவிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் அந்த நாயை தேடி அலைந்துள்ளனர். பல நாட்கள் கழித்து இப்போதுதான் நாய் கண்டுபிடிக்கப்பட்டது. நாயின் வாயை சுற்றி பல அடுக்குகளாக பலமாக டேப் ஒட்டப்பட்டிருதுந்தது. இதனால், வாயை திறக்க முடியாததால், உணவு சாப்பிட முடியாமல் அந்த நாய் தவித்துள்ளது.

டேப் அழுத்தி ஒட்டப்பட்டதால், அதன் நாசி எலும்புகள் முறிந்து போயுள்ளன. வாயின் மேல் தோல் பகுதியிலும் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது. விலங்குகள் நல அமைப்பினர் நாயை மீட்டு அதன் வாயிலிருந்த டேப்பை கழற்றியுள்ளனர். வாயிலிருந்த டேப்பை கழற்றியதும் சுமார் 2 லிட்டர் தண்ணீரை அந்த நாய் குடித்ததாக விலங்குகள் நல அமைப்பின் செயலாளர் ராமச்சந்திரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், ராமச்சந்திரன் கூறுகையில்,’ உணவு , தண்ணீர் இல்லாமல் நாய்களால் சில வாரங்கள் வாழமுடியும். தற்போது, கால்நடை மருத்துவமனையில் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாயின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து விலங்குகளை துன்புறுத்தாதீர்கள் ” என்றார். நாய் குரைத்ததால், யாரோ அதன் வாயில் டேப்பை ஒட்டியுள்ளதாக தெரிகிறது.