கடந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் பிரபலமான தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா துறையினர் உள்ளிட்ட பிரபல 100 பேர் கொண்ட பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. அதேபோல ஒவ்வொரு துறையிலும் அதிக வருமான ஈட்டும் நபர்களின் பட்டியலும் அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 12 மாதங்களில் அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் டாப் 100 பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த 12 மாதங்களில் இந்திய மதிப்பில் சுமார் 800 கோடி ரூபாய் சம்பாதித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு அடுத்து 105 மில்லியன் டாலர் வருவாயுடன் ரொனால்டோ இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முறையே 104 மில்லியன் டாலர், 95.5 மில்லியன் டாலர் வருமானத்துடன் இந்த பட்டியலில் மெஸ்ஸி மற்றும் நெய்மர் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ளனர்.
100 விளையாட்டு வீரர்கள் அடங்கிய இந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மட்டுமே இடம்பெற்றுள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் வருவாயுடன் இந்த பட்டியலில் கோலி 66 ஆவது இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் கோலி 100 ஆவது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ மற்றும் ஐபிஎல் தரப்பில் இருந்து கோலியின் மொத்த சம்பளம் சுமார் 20 கோடி ரூபாய் மட்டுமே இருக்கும் நிலையில், விளக்கும்பாரம் வாயிலாக மட்டுமே சுமார் 180 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளார்.