கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் என்ற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக அனைத்து ரேஷன் கடைகளிலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் பயனாளர்களின் கைவிரல் ரேகை அவசியம் என்று உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு கருவிகளை முறையாக சீரமைக்கவும், பணியாளர்களுக்கு அரசு வலியுறுத்தியுள்ளது. வரும் 17ஆம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அனைத்து துணை ஆணையர்களுக்கும் உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் அளிக்கும்போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக்கணக்குப் புத்தகம், மின்சார வாரிய கட்டண ரசீது ஆகியவற்றை அசலாகச் சரிபார்த்தலுக்கு காண்பிக்க வேண்டும்.
ஆதார் பதிவு எண் இல்லாத பயனாளிகளுக்கு ஆதார் பதிவு மையத்தில் பதிவு செய்து புதிய ஆதார் எண் பெறுவதற்கான ஏற்பாடுகளை முகாம் பொறுப்பு அலுவலர்கள் செய்து தர வேண்டும். இவ்வாறு ஆதார் அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களின் விவரங்களைப் பதிவு செய்து வட்டாட்சியருக்கு தினசரி அறிக்கை அனுப்ப வேண்டும். குறிப்பாக, விளிம்புநிலை மக்கள் ஆதார் பதிவு இல்லாமல் இருக்கக்கூடும். மாவட்ட ஆட்சித் தலைவர் இதற்கான சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்து உடனடியாக ஆதார் பதிவு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.