
சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதுவரை 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தொற்று உறுதியாகிவருகிறது. இந்த நிலையில் தான் கொரோனா தடுப்பு ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் தமிழக அரசு கொரோனாவின் பாதிப்பினை மறைக்கின்றனர் எனவும், கொரோனா பாதிப்புடைய அமைச்சர்கள் பற்றிய தகவல்கள் முறையாக வெளியாவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்துவருகிறது. எனவே இதன் காரணமாக தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கை முடிவினை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். மேலும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏவின் குடும்பத்தினர், அதே போன்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏவின் மனைவி ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது அரசியல் கட்சியினர்களுக்கிடையே அச்சத்தினை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.