இசைஞானி இளையராஜா இன்று தனது 77-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவரது பிறந்த நாளான இன்று இளையராஜா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை பார்க்கலாம்.

தனது அண்ணன் பாவலூர் வரதராஜனுக்கு உதவியாக இருக்க இளையராஜாவை அவரது தாய் அனுப்பினார். ஒரு இசைக் கச்சேரியின் போது வரதராஜனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே, தனது சகோதரரை ஊக்குவிக்கும் விதமாக இளையராஜா பாடல்களை பாடத் தொடங்கினார். அதுவே இளையாராஜாவின் இசை பயணத்திற்கு முதல்படியாக அமைந்தது. தனது அண்ணனின் வழிக்காட்டுதலின் படி இளையராஜா தனது வாழ்க்கையை தொடங்கினார்.
தனது கெரியரின் தொடக்கத்தில் இளையராஜா பொன்மாலை, திருவெரும்பூர் ஆகிய இசைக் கச்சேரிகளை நடத்தினார். இந்த இரு இசை நிகழ்ச்சிகளுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இன்று வரை இந்த இசை நிகழ்ச்சிகள் இரண்டும் இளையாராஜாவிற்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகளாக உள்ளன. இளையாராஜாவுக்கு மறக்க முடியாத நினைவுகளை இந்த நிகழ்ச்சிகள் வழங்கின.
இளையராஜா தனது சொந்த அக்கா மகளான ஜீவாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என்ற மகன்களும், பவதாரணி என்ற மகளும் உள்ளனர். இளையராஜாவை போலவே அவரது பிள்ளைகளும், இசையமைப்பாளராகவும், பாடகராகவும் உள்ளனர்.

கிறிஸ்தவராக பிறந்திருந்தாலும், இளையாராஜா பின்னர் இந்து மதத்திற்கு மாறினார். அவரது மகன் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறார். இளையாராஜா, ரமண மகிரிஷி, தாய் மூகாம்பிகையின் தீவிர பக்தர் ஆவார்.
இசைக் குறிப்புகளை தானே எழுதி இசையமைக்கும் வெகுசில இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர். பல ஆண்டுகளாக இதே முறையை பின்பற்றிய இசையமைத்த அவர், மனதை விட்டு நீங்காத இனிமையான பாடல்களை வழங்கியுள்ளார்.
இளையராஜா ஒருமுறை தனது பாடலை பாடும் படி பிரபல பாடகி எல்.ஆர். ஈஸ்வரியிடன் அணுகியுள்ளார். ஆனால் அப்போது புதிய இசையமைப்பாளர் என்பதால், எல்.ஆர். ஈஸ்வரிஅவரது இசையமைப்பில் பாட மறுத்துவிட்டார், அதன்பிறகு ஒருமுறை கூட எல்.ஆர் ஈஸ்வரியை தனது இசையமைப்பில் பாடவைக்கவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இணையாக ஆள் உயர கட்-அவுட் வைக்கப்பட்ட முதல் இசையமைப்பாளர் இளையராஜா தான். முரட்டுக்காளை படம் வெளியான போது இளையராஜா ரசிகர்கள் அவருக்கு ரஜினிகாந்திற்கு இணையான கட்-அவுட் வைத்தனர்.
இளையராஜா தற்போது வெள்ளை வேட்டி, குர்தா அணிவதை பழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் தனது திரை வாழ்க்கையின் தொடக்கத்தில் விலை உயர்ந்த ஆடம்பர ஆடைகளை அணிவதை இளையராஜா மிகவும் விரும்பினார்.
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய விருதை வாங்க வேண்டும் என்பதே பல திரைக் கலைஞர்களின் கனவாக உள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இளையராஜா 2 முறை தேசிய விருதை வாங்க மறுத்துள்ளார்.

உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜா, இதுவரை 1000-க்கும் மேற்பட்ட இந்திய மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். சிம்பொனி இசைக்குழுவினர் அவருக்கு மேஸ்ட்ரோ என்ற பட்டத்தையும், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் இசைஞானி பட்டமும் வழங்கப்பட்டது.