வடமாநிலங்களை அச்சுறுத்தி வந்த வெட்டுக்கிளிகள் தற்போது தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்துள்ளாதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு படை எடுத்துள்ள வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிராவின் விதர்பா, உத்தரபிரதேசத்தில் மதுரா மற்றும் புதிய டெல்லியில் பெரும் அளவில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
வேளாண் நிலங்களை பெரிய அளவில் சேதப்படுத்தி வரும் வெட்டுக்கிளிகளால் வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்தியா சந்தித்து வரும் நிலையில், தற்போது வெட்டுக்கிளிகளின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே தமிழகத்திற்குள் வர வாய்ப்பே இல்லை என்று தமிழக வேளாண் துறை விளக்கமளித்த நிலையில், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அம்மாவட்டத்தில் உள்ள நேரலகிரி என்ற கிராமத்தில் வெட்டி கிளிகள் படையெடுக்க தொடங்கி உள்ளன. அங்குள்ள பயிர்கள், செடிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள், இதுதொடர்பான புகைப்படங்களை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை வேளாண் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆய்வு செய்த பிறகே அவை சாதாரண வெட்டுக்கிளிகளா அல்லது வடமாநிலத்தில் இருந்து வந்தவையா என்பது தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார். அதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.