பறக்க தொடங்கிய உடனே இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிடும் வெட்டுக்கிளிகள் இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு படை எடுத்துள்ள வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிராவின் விதர்பா, உத்தரபிரதேசத்தில் மதுரா மற்றும் புதிய டெல்லியில் பெரும் அளவில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
வேளாண் நிலங்களை பெரிய அளவில் சேதப்படுத்தி வரும் வெட்டுக்கிளிகளால் வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்தியா சந்தித்து வரும் நிலையில், தற்போது வெட்டுக்கிளிகளின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து இங்கிலாந்தில் இருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்து ரசாயணம் தூவி வெட்டுக்கிளிகளை அழிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த வெட்டுக்கிளிகளை இப்போதே கட்டுப்படுத்த வேண்டும் எனவும், ஒருவேளை தவறினால் இந்த எண்ணிக்கை 400 மடங்கு அதிகரிக்கும் என்று உலக பூச்சியின நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே வெட்டுக்கிளிகள் மீது போர் தொடுப்பது தான் அழிக்க இவற்றை அழிக்க ஒரே வழி என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை தற்போது பார்க்கலாம். பொதுவாக பெண் வெட்டுக்கிளிகளின் கர்ப்பப்பையில்150 முட்டைகள் இருக்கும். அதில் இருந்து இளம் வெட்டுக்கிளி வெளியே வர 2 வாரங்கள் ஆகும். ஆனால் இவை பறப்பதற்கு மேலும் ஒரு மாத காலம் தேவைப்படும். சாதாரண வெட்டுக்கிளியில் இருந்து வேட்டை வெட்டுக்கிளியாக முட்டையில் இருந்து உருமாற 3 மாதங்கள் ஆகும் எனவும் கூறப்படுகிறது.
ஆனாலும் கூட, பறக்க ஆரம்பித்த உடனே இந்த வெட்டுக்கிளிகள், இனப்பெருக்கத்திற்கு தயாராகி விடுகின்றன என்பது தான் கூடுதல் சுவாரஸ்யம். அதாவது இந்த வெட்டுக்கிளிகள் பறக்க தொடங்கிய 3 மாதங்களில், 20 மடங்கு அவற்றின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். இதுவே 2 மாதங்களில் 400 மடங்காகவும், 9 மாதங்களில் 8,000 மடங்காகவும் இனப்பெருக்கம் உயர்ந்து கொண்டே செல்லும் என்பதே நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் உண்மை.

இளம் வெட்டுக்கிளிகள் பெரும்பாலும் பச்சை மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் இவை நிறம் மற்றும் உடலமைப்பை மாற்றக் கொள்ளும் தன்மை கொண்டவை. வளர்ந்த வெட்டுக்கிளிகள் கூட்டு சேர்ந்து பயணிக்க தொடங்கும். ஒரு சதுர கி.மீட்டருக்கு கோடிக்கணக்கிலான வெட்டுக்கிளிகள் பறக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம்.. ஒரு சதுர கி.மீட்டருக்கு சுமார் 8 கோடி வெட்டுக்கிளிகள் பறக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஒரு சில வெட்டுக்கிளி திரள்கள் ஒரு நாளைக்கு சுமார் 81 மைல் அல்லது அதற்கு மேற்பட்ட தூரங்களை கூட கடந்து பறக்குமாம். சராசரியாக வெட்டுக்கிளிகள் கூட்டம் 10 யானைகள் அல்லது 25 ஒட்டகங்கள் அல்லது 2500 மனிதர்கள் உண்ணும் உணவை சாப்பிடுகின்றன. இதனால் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு உணவு பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.