அரபிக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்திற்குள் வலுப்பெற்று புயலாக மாறும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அரபிக் கடலில் – லட்சத்தீவுகள் இடையே உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்திற்குள் வலுப்பெற்று புயலாக மாறும். இந்த புயலானது வரும் 3-ம் தேதி காலையில் வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் மையம் கொள்ளும்” என்று குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி கேரளா, லட்சத்தீவு, கர்நாடகாவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஜூன் 2, 3 தேதிகளில் கொங்கன், கோவா கடற்கரை பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகள் வடக்கு கொங்கன், வடக்கு மகாராஷ்டிரத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் தெற்கு குஜராத், டாமன் டையூ ஆகிய இடங்களின் ஒரு சிலப் பகுதிகளில் ஜுன் 3-ம் தேதி கனம்ழை மற்றும் அதிகனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் குஜராத், கர்நாடகா, கேரளா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது முதலில், மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும், பின்னர் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
சமீபத்தில் மேற்குவங்கத்தை தாக்கிய அம்பன் புயல் காரணமாக 98 பேர் உயிரிழந்த நிலையில், அம்மாநிலத்தில் இதுவரை இல்லாத கடுமையான சேதம் ஏற்படுத்தியது. பின்னர் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி இடைக்கால நிவாரணமாக ரூ. 1000 கோடியை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.