சாத்தான்குளம் வழக்கில், சிபிசிஐடி இன்றைக்கே விசாரணையை தொடங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாகவே தந்தை, மகன் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருவரின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், இந்த கொடூரத்தை அரங்கேற்றிய காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இந்த விவகாரத்தை, கோவில்பட்டி மாஜிஸ்திரேட், பாரதிதாசன் விசாரணை செய்துவருகிறார். அவர் விசாரணை நடத்துவதற்காக அவர் சாத்தான்குளம் காவல்நிலையம் சென்ற போது, காவலர் ஒருவர் வழக்கு தொடர்பான ஆவணங்களை தர மறுத்துடன், மாஜிஸ்திரேட்டையே தரக்குறைவான வார்த்தைகளால் இழிவாக பேசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். மேலும் “பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உடலில் மோசமான காயங்க்ள் இருப்பது உறுதியாகி உள்ளது. காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு போதிய முகாந்திரம் உள்ளது. சிபிஐ விசாரணையை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
நீதி கிடைக்கும் என ஜெயராஜ் குடும்பத்தினர் நம்புகின்றனர். எனவே இந்த வழக்கு விசாரணை ஒரு நொடி கூட வீணாக கூடாது. வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கும் முன்பு நெல்லை சரக ஐஜி விசாரணையை ஏற்க இயலுமா” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் நெல்லை சிபிசிஐடி விசாரணையை தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிபிசிஐடி அனில்குமார் இன்றைக்குள் விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் ஆணையிட்டனர். விசாரணையை சிபிஐ ஏற்கும் வரை, சிபிசிஐடி விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.