
மதுரை: மதுரை தெற்கு வட்டாரப்போக்குவரத்து அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 3 நாட்களுக்கு அலுவலகத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரையில் கொரோனாவின் பாதிப்பு கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் என அனைவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் சென்னையிலிருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மதுரைக்கு வந்துள்ளதன் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தற்போது மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து அவருடன் அலுவலகத்தில் பணியாற்றிய 17 பணியாளர்களுக்கு கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது. இந்நநிலையில் கொரோனா பரவல் மேலும் பரவாமல் இருக்கும் வகையில் இன்று முதல் 3 நாட்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை மூடுவதற்கு உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது மதுரையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று மக்களிடம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.