கோவில் வளாகத்தில் ஒரு ஆண், தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் அல்வாய் பகுதியில் வசிப்பவர் பவன்குமார் (38). இவர் பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் மைத்துனரான பவன்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்துள்ளார். இந்நிலையில், இவரது மைத்துனரின் குடும்பத்தினர் சில சடங்குகளை செய்யுமாறு பவன்குமாரை ஊருக்கு அழைத்துள்ளனர். இதையடுத்து, பவன்குமார் தன்னுடைய வீட்டிற்கு வந்து மனைவியுடன் மஞ்சுநாத் கோவிலுக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து, சம்பவத்தன்று இரவு மஞ்சுநாத் கோவில் வளாகத்தில் இருந்து ஒரு ஆணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், ஓடி சென்று பார்த்துள்ளனர். அப்போது கோவிலில் உள்ள ஒரு அறை பூட்டப்பட்ட நிலையில், அதில் இருந்து கருகிய வாடை வீசியுள்ளது. உடனே அந்த அறையின் கதவை திறந்து பார்த்த போது நாற்காலி ஒன்றில் கட்டப்பட்ட நிலையில், ஆணின் சடலம் எரிந்து கொண்டிருந்துள்ளது.
இதையடுத்து, அவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவத்தில் முதற்கட்ட விசாரணையில், பவன் குமாரின் மனைவி கிருஷ்ணவேணி கூறுகையில், “என்னுடைய சகோதரர் என்னை தண்ணீர் வாங்கி வர அனுப்பினார். அதன்பின்னர் எனக்கு என்ன நடந்ததென்று தெரியாது. ஆனால் மாரடைப்பால் இறந்த ஜெகன் குமாருக்கும், என் கணவருக்கும் கருத்துவேறுபாடு இருந்தது.
இதனால் என் கணவர் மந்திரவாதம் செய்து அவரை கொன்றுவிட்டார் என்று அவருடைய குடும்பத்தினர் நம்புகின்றனர்” என்று கூறியுள்ளார். இதையடுத்து பவன் குமாரை அவருடைய மைத்துனரின் குடும்பம் தான் அறையில் கட்டி வைத்து எரித்தது தெரியவந்துள்ளது. மேலும், இவரை யார் தீயிட்டுக் கொளுத்தினார்கள்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.