மதுரை அருகே கடைக்காரர் கடனுக்கு சிகரெட் தராததால் ஆத்திரத்தில் கடையை கொளுத்திய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் பூமிநாதன். அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். ஊரடங்கால் பல நாட்கள் மூடப்பட்டிருந்த கடையை சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுக்கு பின் மீண்டும் திறந்து வியாபாரத்தை துவக்கினார்.
இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர், சில நாட்களுக்கு முன் இரவு 7 மணிக்கு பூமிநாதனிடம் ஒரு சிகரெட் கடன் கேட்டுள்ளார். அவரும் ஒரு சிகரெட் தானே என கடனுக்கு தந்துள்ளார். சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த குணசேகரன் மீண்டும் ஒரு சிகரெட் கடனுக்கு கேட்டுள்ளார். அதற்கு பூமிநாதன் பல நாட்களுக்கு பின்னர் நானே இப்பொழுது தான் கடன் வாங்கி கடை திறந்துள்ளேன்; இப்படியே கடனுக்கே வாங்கி சென்றால் நான் எப்படி வாங்கிய கடனை திருப்பி செலுத்துவது என கூறி சிகரெட் தர மறுத்துள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த குணசேகரன் நீ எப்படி கடை நடத்தப்போகிறாய் என்பதை நான் பார்க்கத்தான் போகிறேன் என ஆத்திரத்துடன் கத்தி சென்றுள்ளார்.
வழக்கம் போல இரவில் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார் பூமிநாதன். சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு வந்த குணசேகரன் கடையை எரித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
மறுநாள் காலை கடைக்கு வந்த பூமிநாதன் கடை முற்றிலும் எரிந்து போயிருப்பதை கண்டு அதிர்ந்துபோய் போலீஸிடம் புகாரளித்தார். இதையடுத்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து குணசேகரனை கைது செய்து சிறையிலடைத்தனர்.