ஜெ.அன்பழகன் உயிரிழப்பால் காலியான திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை, தயாநிதி மாறனுக்கு தர வேண்டும் என திடீரென மாறன் சகோதரர்கள் நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருணாநிதியின் மனசாட்சியாக இருந்து கட்சியில் பொதுச்செயலாளர், பொருளாளர் என எந்த பதவியில் இல்லாத போதும் திறம்பட செயல்பட்டு அரசியல் நட்சத்திரமாக ஜொலித்தவர் முரசொலி மாறன்.
அதே பாணியில் களமிறக்கப்பட்ட தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றாலும், அந்த பதவியை தவிர்த்து தனிப்பட்ட முறையில் தனக்கென அரசியல் வட்டாரத்தில் எந்த ஒரு பெரும் வெற்றியையும் எட்டவில்லை. மாறாக அவர் மீது எழுந்த ஊழல் வழக்குகள் மட்டுமே பல வருடங்களாக நீடித்து வருகின்றன.
இதனிடையே, பல்வேறு தடாலடி, குடும்ப அரசியல் போன்றவற்றை மேற்கொண்டு நடந்து முடிந்த தேர்தலில் எம்.பி சீட் பெற்றதோடு வென்றும் காட்டினார் தயாநிதி மாறன்.

இந்த நிலையில் கொரோனாவால் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெ. அன்பழகன் காலமானார். இதனையடுத்து அவர் வகித்து வந்த திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாலர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக திமுக கட்சிக்குள் பெரும் அரசியல் லாபிக்கள் நடைபெற்று வருகிறது. அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ. மோகனுக்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அவர்தான் திமுக தலைமைக்கு மிக நெருக்கமானவராக மட்டுமல்ல நிதி வசதியிலும் வலுத்தவராகவும் இருக்கிறார் என தலைமைக்கு நெருக்கமானவர்கள் என தெரிவிக்கின்றனர்.

இதனிடையே புதிய திருப்பமாக எங்களுக்கு கட்சி பதவியே இல்லையே. மத்தியிலும் ஆட்சியில் இல்லை.. வெறும் எம்.பி. பதவியை வைத்துக் கொண்டு என்ன செய்வது? ஆகையால் மேற்கு மாவட்ட செயலாளர் பதவி எங்களுக்கே வேண்டும் என தயாநிதி மாறனுக்காக நெருக்கடி கொடுக்கிறதாம் மாறன் குடும்பம். ஏற்கனவே பலவித சந்தேகங்களுடனேயே திமுக தலைமை இவர்களை பக்கத்தில் வைத்திருக்கிறது. இந்த நிலையில் கட்சிப் பதவியையே கேட்கிறார்களே… எதற்காக இருக்கும்? என அதிர்ச்சியுடன் விவாதிக்கிறார்களாம். ஏற்கனவே, கட்சி தலைமை உடனான எம்.பிக்கள் ஆலோசனை கூட்டத்தின்போதே, கட்சிக்குள் தங்களுக்கு எந்த இடமும் இல்லை தயாநிதி மாறன் கண் கலங்கிய சம்பவங்கள் எல்லாம் நடந்தது குறிப்பிடத்தக்கது.