நம் வீட்டில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த உணவு பொருட்களையும் இயற்கை மருத்துவத்தையும் நாம் அறிந்துக்கொள்வது இத்தகைய கால கட்டத்தில் மிகவும் ஏற்றது. ஏனெனில் முன்பு சிறு சிறு உடல் உபாதைகளுக்கு கூட மருத்துவமனைக்கு ஓடிய நாம் தற்போது அந்த பக்கம் செல்லவே பயப்படும் நிலையில் இருக்கிறோம். எனவே இயற்கை தந்த மருத்துவத்தை முறையாக எப்படி பயன்படுத்துவது என்று தற்போது பார்க்கலாம்.

ஆமணக்கு அனைவரும் அறிந்த ஒன்று. அதில் கொட்டைகளின் அளவை பொறுத்து வகைப்படுத்தினால் சிற்றாமணக்கு, பேராமணக்கு என பிரிக்கலாம். இருப்பினும் மருத்துவ குணம் ஒன்று தான்.
பிரசவித்த தாய்மார்களுக்கு பால் கட்டினாலோ, சுரப்பத்தில் பிரச்சனை ஏற்ப்பட்டலோ ஆமணக்கு இலையை விளக்கெண்ணையில் மிதமான சூட்டில் வதக்கி ஒத்தடம் வைக்கலாம். இது பால் சுரத்தலையும் வலியையும் சரி செய்யும். அதே போல் மார்பக காம்புகளில் ஏற்ப்படும் வெடிப்புகள், புண்கள் போன்றவற்றை சரி செய்ய ஆமணக்கு எண்ணையில் சுத்தமான பருத்தியை ஊறவைத்து அதனை புண்களில் படுமாறு வைத்துக்கொள்ள அவை விரைவில் குணமடையும்.

ஆமணக்கு இலையில் உள்ள மருத்துவ குணம் வாத நோயாளிகளை குணப்படுத்துகிறது. மேலும் ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி மூட்டு பிரச்சனை உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து வர வலி, வீக்கம் நீங்கும்.
மஞ்சள்காமாலை நோய் உள்ளவர்கள் ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலையை சேர்த்து அரைத்து உருண்டையாக பிடித்துக் கொள்ள வேண்டும். அதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூன்று நாட்களில் மஞ்சள்காமாலை நோய் குணமடையும். இந்த நாட்களில் பத்திய உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.