மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தானாக இயங்கும் அமைப்புகள் வர உள்ளதால் அங்கு எம்.எஸ்.என். வலைதளங்களில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் வேலையை இழக்கும் ஆபாயம் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எம்.எஸ்.என். வலைதளங்களில் பிற செய்தி நிறுவனங்களின் செய்திகளை தேர்ந்தெடுத்து, அவற்றிக்கு தலைப்புகளை வைத்து அதற்கேற்ப புகைப்படங்களை வைப்பது என சில பத்திரிக்கையாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அந்த செய்திகளுக்கு முறையான சன்மானமும் நிறுவனம் வழங்கி வருகிறது.

தற்போது இந்த வேலையை செயற்கை நுண்ணறிவால் இயங்கும் தொழில்நுட்பம் மூலம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த மாற்றம் தொழில் ரீதியான முன்னேற்றம் எனவும் கொரோனா பரவலால் எடுக்கப்பட்டது அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு வேலை திறனை அதிகரிப்பதுடன் முதலீடுகளை அதிகரிக்கவும் உதவும் என்ற நம்பிக்கையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த முயற்சியை எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.