கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் 40 சதவீதம் வரை பாடத்திட்டத்தைக் குறைக்கப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. மேலும் அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஆனாலும் இந்த, அறிவிப்பு வெளியாகி 2 மாதங்களை கடந்தும், பாட அளவு குறைப்பு குறித்த எந்த விவரங்களையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிடவில்லை. இதனிடையே, சிபிஎஸ்இ, பாடத்திட்டத்த பின்பற்றும் பள்ளிகள் கடந்த ஜூலை மாதமே 30 சதவீத அளவுக்கு பாடங்களை குறைத்து, அதன் முழு விவரங்களையும் வெளியிட்டன.

அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி சிபிஎஸ்இ, பள்ளிகள் பாடங்களை நடத்தி வருகின்றன. ஆனால், மாநிலப் பள்ளிக் கல்வி வாரியத்தின் சார்பில் குறைக்கப்பட்ட பாடங்களின் விவரங்களை இதுவரை அரசு வெளியிடவில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு எந்தெந்தப் பாடங்களை நடத்துவது என்று ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். ஈரோடு அருகே கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ 4 நாட்களுக்குள் பாடத்திட்டக் குறைப்பு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிடும். எந்தெந்தப் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை நாளை முதல்வரிடம் ஒப்படைக்கப்படும். அதன்பின்னர், எந்த எந்தப் பாடங்கள் இணையம் மூலமாகத் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.