தேர்வை விட உயிர் முக்கியம் என்பதை இந்த அரசுக்கு உணர்த்து விதமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் 15-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே தேர்வை தள்ளி வைக்கக் கோரி, பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தேர்வை நடத்துவதில் ஏன் இவ்வளவு அவசரம் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், லட்சக்கணக்கான மாணவர்கள் நலனில் ரிஸ்க் எடுக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வரும் மாதங்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என்பதால் தேர்வை நடத்த இதுவே சரியான நேரம் என்று தமிழக அரசு வாதிட்டது. இதனையடுத்து இந்த வழக்கை 11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதனிடையே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின், பொதுத் தேர்வை நிறுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ‘ ஜூன் 10 அன்று காலை 10 மணிக்கு #10thPublicExam-ஐ நிறுத்தக் கோரி கண்டன ஆர்பாட்டத்தை நடத்துவோம்! இலட்சக்கணக்கான மாணவர்கள் நலனுக்காக அவரவர் இல்லம் முன்பு கூடி, தனிமனித இடைவெளியுடன் முழக்கம் எழுப்புவோம்!
இரக்கமற்ற அரசின் இதயத்தை தட்டி எழுப்புவதாக ஆர்ப்பாட்டம் அமையட்டும். தேர்வை விட உயிர் முக்கியம் என்பதை இந்த அரசுக்கு உணர்த்துவோம். அதிமுக அரசின் அரசியல் சித்து விளையாட்டில் இருந்து லட்சக்கணக்கான மாணவ மாணவியரை காப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.