பொதுத் தேர்வை ரத்து செய்யும் முடிவை தமிழக அரசு முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும் என்று ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 15-ம் முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஊரடங்கு காலத்தில் தேர்வை நடத்தக் கூடாது என்றும், இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அரசியல் தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என பல தரப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றமும், தேர்வை ஒத்திவைக்கும் முடிவை அரசு பரீசிலிக்க வேண்டும் என்று கூறி வழக்கை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் பழனிசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அரசு அதிகாரிகளிடம் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

இந்த சூழலில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ #10thPublicExam-ஐ ரத்து செய்திருக்கும் அரசின் முடிவை வரவேற்கிறேன். முன்கூட்டியே இம்முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள், பெற்றோரின் பதற்றத்தையும், மன உளைச்சலையும் தவிர்த்திருக்கலாம்.
இனிமேலாவது கவனச் சிதறல்களில் ஈடுபடாமல் முழுமையாக #COVID19 தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும். மேலும் அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டிருப்பதால், நாளை அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.