இந்தியா – சீனா எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான தொலைபேசி உரையாடலில் விவாதித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மோடிக்கு அழைப்பு விடுத்தார். ஜி7 கூட்டமைப்பில் ஏற்கனவே இருக்கும் நாடுகளுடன் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் இணைய வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் ட்ரம்ப் மோடியிடம் தெரிவித்தார். இந்த உச்சி மாநாட்டின் வெற்றியை உறுதி செய்ய, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது என்று மோடி தெரிவித்தார்.

மேலும் அமெரிக்காவில் தற்போது நடந்து வரும் உள்நாட்டு இடையூறுகள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்ததோடு, விரைவில் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான வாழ்த்துகளையும் மோடி கூறினார். மேலும் இரு நாடுகளிலும் தற்போது கொரோனா பாதிப்பு நிலவரம், இந்தியா – சீனா எல்லை விவகாரம், உலக சுகாதார மையத்திற்கு தேவைப்படும் சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக இந்தியா – சீனா எல்லை பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதாக ட்ரம்ப் கடந்த வாரம் தெரிவித்தார். மேலும் சீனா விவகாரத்தில் மோடி அதிருப்தியில் உள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார். ஆனால் மோடி – ட்ரம்ப் இடையே சமீபத்தில் எந்த உரையாடலும் நிகழவில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்த நிலையில் இன்று மோடியும் ட்ரம்பும் உரையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.