இன்று ஒரே நாளில் புதிதாக 2,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மகாராஷ்டிரா மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,000-ஐ தாண்டியுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று இதுவரை 200-க்கும் மெற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதன் காரணமாக இதுவரை உலகளவில் 59 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 25 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்த சூழலில் இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிராவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,228-ஆக அதிகரித்துள்ளது. ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு இதுவாகும். அதே போல் இன்று ஒருநாளில் மட்டும் 116 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 2098-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் வர்த்தக மற்றும் பொழுதுபோக்கு தலைநகரமாக விளங்கும் மும்பை நகரம், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக உள்ளது. மும்பையில் மட்டும் இதுவரை 36,932 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,173 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.