இந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 9,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4 கட்டங்களை கடந்து தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்தபாட்டில்லை. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஒரு நாள் பாதிப்பில் 9,000-ஐ தாண்டியுள்ளது இதுவே முதன்முறையாகும். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,07,615லிருந்து 2,16,919ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,815லிருந்து 6,075ஆக உயர்ந்துள்ளது. எனினும் இதுவரை 1,04,107 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 1,06,737 பேர் கொரோனாவிற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 74,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 25,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இந்த பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 23,645 பேருக்கும், குஜராத்தில் 18,100 பேருக்கும், ராஜஸ்தானில் 9,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே உலகளவிலான கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியா 7-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.