காலை எழுந்ததும் காஃபி குடிப்பதில் தொடங்கி சுப நிகழ்வுகள், ஆபிஸ் பார்ட்டிகள், கோவில் திருவிழாக்கள் ஏன் துக்க வீடுகளில் கூட ஆன்லைன், லைவ் டெலிகாஸ்ட் செய்கின்றனர். மனிதர்களின் ஆறாம் விரலாய் எங்கு சென்றாலும் அருகில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுவதே இல்லை. அனைத்தையும் எங்கோ, எதிலோ இருக்கின்ற வேறொருவருடன் சாட் செய்து கொண்டோ அல்லது பேசிக் கொண்டோ தான் இருக்கின்றனர். ஆனால், பெட்ரோல் பங்குகளில் செல்போனை உபயோகிக்க வேண்டாம் என போர்டுகள் வைக்கப்பட்டாலும் யாரும் அதை கண்டு கொள்வதில்லை. இதே போல் அலட்சியமாக நடந்து கொண்ட பெண் ஒருவரின் மொபைல் போன் தீப்பிடித்து அதே இடத்திலேயே அந்த பெண் மீது தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அலறிக் கூச்சலிட்டும் பயனில்லை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், தனது பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப 18 வயதான பவ்யா என்ற இளம்பெண் தனது தாயார் ரத்னம்மாவுடன் (46 ) சென்றார். அப்போது, பெட்ரோல் நிரப்பும் இயந்திரம் அருகே காத்து நின்றார். அந்த சமயத்தில் பவ்யா தனது செல்போனை பயன்படுத்தியுள்ளார். அதே நேரத்தில் ஒரு பெட்ரோல் பங்க் ஊழியர் பக்கத்தில் நிற்பவருக்கு கேனில் பெட்ரோலை நிரப்புகிறார். அப்போது, திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, பவ்யா மற்றும் ரத்தினம்மா மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடினர்.
ஆனால் பவ்யா உடையில் தீ பற்றியதால் அவர் உடல் முழுவதும் தீ பரவியது. அவரது தாயார் காயத்துடன் மீட்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. எரிபொருள் நிலையத்தில் செல்போன் பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.