
வேலூர் : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் உள்ளனர் முருகன் மற்றும் அவரது மனைவி நளினி.30 ஆண்டுகளாக தனிச்சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் இருவரும், இலங்கை மற்றும் லண்டனில் உள்ள தங்களின் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேச சிறை நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்தனர்.
ஆனால் கொலைக்குற்றவாளியான அவர்களுக்கு தொடர்ந்து சிறைத்துறை நிர்வாகம் கோரிக்கையை நிராகரித்து வந்தது. இதற்கான அனுமதியினை கோரி நீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளனர். இந்த நிலையில் தான் தந்தையின் இறுதி சடங்கினை வீடியோ காலின் மூலமாவது பார்த்துக்கொள்கிறேன் என அனுமதி கேட்டும் அதற்கான அனுமதியும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளார் கைதி முருகன்.

தொடர்ந்து 30 ஆண்டுகளாக சிறை வாழ்க்கை, இக்கட்டான காலக்கட்டத்தில் கூட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை போன்ற விரக்தியில் தான் சிறையிலேயே ஜூவ சமாதி அடையப்போகிறேன் எனவும், அதற்கான அனுமதி கோரி ஜூன் 1 ஆம் தேதி முதல் 11 நாள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.

இதன் காரணமாக அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுவருவதால் சிறை மருத்துவர்கள் முருகனின் உடல்நிலையைத் தினமும் பரிசோதனை செய்து வருகின்றனர்.மேலும் உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி தொடர்ச்சியாக சிறை நிர்வாகம் வலியுறுத்தியும் இதுவரை ஒத்துக்கொள்ளாமல் முருகன் திட்டவட்டாக இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.