“தந்தை, மகன் உயிரிழப்பு சாதாரண விஷயம் அல்ல”- நீதிபதிகள் கருத்து

ஊரடங்கினை மீறியதாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் மர்மான முறையில் உயிரிழந்த வழக்கில், டிஜிபி உடனடியாக வீடியோ கான்பிரசின் மூலம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜின் மகன் பெனிக்ஸ் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 20-ம் தேதி, ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததாக, ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது காவல்நிலையத்தில், பெனிக்ஸ் முன்பு, அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாகவும், அதனை தட்டிகேட்ட பெனிக்ஸுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் தந்தை, மகன் இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் இறந்ததற்கு போலீசாரின் கொடூர தாக்குதல் தான் காரணம் எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கினை தாமாக முன்வந்து இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. நீதிபதிகள் புகழேந்தி மற்றும் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது தந்தை, மகன் உயிரிழப்பு சாதாரண விஷயம் அல்ல எனவும், நீதிமன்ற காவலில் உயிரிழ்ந்ததை கடுமையான நிகழ்வாக கருதுகிறோம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் காணொலி காட்சி மூலம் இன்று மதியம் 12.30 மணிக்கு தமிழக டிஜபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நேற்றைய விசாரணையில் கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் உடல்களை, 3 மருத்துவா்கள் அடங்கிய குழு பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. .