தந்தையுடன் ரயிலில் பயணித்த 16 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம், கொச்சி அருகே கடந்த சனிக்கிழமை இரவு 7.50 மணியளவில் எர்ணாகுளத்தில் இருந்து குருவாயூர் வரை செல்லும் சிறப்பு விரைவு ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஐந்து பேர் கொண்ட கும்பல் ரயிலுக்குள் சிறுமியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது. அந்த சமயத்தில் சிறுமியை தாக்கிய அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சிறுமியின் தந்தையையும் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் முதல் குற்றவாளி ஜாய் ஜேக்கப் (53), மூன்றாவது குற்றவாளி சிஜோ ஆண்டனி (43), நான்காவது குற்றவாளி சுரேஷ் (53) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய குற்றவாளிகளை எர்ணாகுளம் ரயில்வே காவல்துறை ஆய்வாளர் கிறிஸ்பின் சாம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்தனர்.
முதல் குற்றவாளியான ஜாய் வயநாட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் இருந்தும், சுரேஷ் மற்றும் சிஜோ கொச்சியில் இருந்தும் பிடிபட்டனர். வியாழன் இரவு கொச்சிக்கு ஜாய் அழைத்து வரப்பட்டார். இன்னும் இரண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ரயில்வே காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருச்சூர், வயநாடு மற்றும் எர்ணாகுளத்தை மையமாகக் கொண்ட தனிக்காவல் படை ஒன்றும் விரிவான தேடுதலைத் தொடர்சியாக மேற்கொண்டதை அடுத்து குற்றவாளிகள் கைதாகியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து திருச்சூர் ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பின்னர் எர்ணாகுளம் தெற்கு ரயில்வே காவல்துறையினருக்கு இந்த வழக்கை மாற்றியது குறிப்பிடத்தக்கது. குற்ற சம்பத்தில் ஈடுபட்ட ஐந்து பேரும் இரிஞ்சாலக்குடா வரை பல்வேறு ரயில் நிலையங்களில் இறங்கியதாகத் கூறப்பட்டுள்ளது.