கர்நாடகாவில் அரசு பேருந்தில் பயணித்த நபரிடம் மடிக்கணினியை எடுத்துச் சென்றதற்காக கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மக்கள் வசதிக்காக அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற. கர்நாடக மாநிலம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் தமிழகம், கேரளா, ஆந்திராவிற்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
பேருந்தில் பயணம் செய்பவர்களில் சிலர் லேப்டாப் எடுத்துச் செல்கின்றனர். இது சர்வ சாதாரணமாகிவிட்டது. பெங்களூருவில் ஐ.டி.துறையினர் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். இதனால் வெகு தூரத்தில் பயணிப்பவர்கள் லேப்டாப்பை வைத்திருக்கின்றனர். இந்நிலையில் கர்நாடகாவின் கதக் மாவட்டத்தில் இருந்து ஹுப்ளிக்கு அரசு பேருந்தில் சென்ற இளைஞர் ஒருவர், லேப்டாப் வைத்திருந்ததால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
லேப்டாப் என்பது செல்போனுக்கு அடுத்த படியாக பரவலாக அனைத்து தரப்பினராலும் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் பொருளாக மாறிவிட்ட சூழலில், அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக தனது பெயரை வெளியிட மறுத்த அந்த இளைஞர் கூறுகையில், ”ஹூப்ளிக்கு வடமேற்கு கர்நாடக அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது எனது லேப்டாப் வெளியில் எடுத்து பயன்படுத்திக் கொண்டு இருந்தேன்.
இதைக் கவனித்த பேருந்தின் டிரைவர் (நடத்துனரும் அவரே) என்னிடம் மின் உபகரணங்கள் எடுத்து வருவதற்காக லக்கேஜ் கட்டணமாக கூடுதலாக ரூ.10 வழங்க வேண்டும் என்று கூறினார். இது குறித்து நான் கேட்ட போது கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட சமீபத்திய உத்தரவை மேற்கோள் காட்டி, இந்த உத்தரவின் அடிப்படையில் தான் கூடுதல் டிக்கெட் வசூலிப்பதாக விளக்கம் அளித்தார்.
பயணிகள் கொண்டு செல்லும் லக்கேஜ்களின் எடை 30 கிலோவுக்கு அதிகமாக இல்லாவிட்டாலும் கட்டணம் இன்றி எடுத்து செல்லும் பொருள்களின் பட்டியலில் லேப்டாப் இல்லை என்று கூறி இந்த கூடுதல் வசூல் செய்யப்பட்டதை அறிந்தேன். உண்மையில் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல் பேரிலேயே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதும் தெரியவந்தது” என கூறினார்.