கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள் ஊஷார்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் கோழிகளிடையே பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. நாமக்கல் மண்டலத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கோழிப்பண்ணைகளுக்கு வரும் லாரிகள், பண்ணைகளில் இருந்து வெளியே செல்லும் லாரிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
ஊழியர்களும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மட்டுமே பண்ணைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கோழிகளுக்கு செலுத்தும் மருந்துகள் கூடுதலாக செலுத்தப்படுகிறது. கேரளாவுக்கு செல்லும் முட்டைகள் தடை வருமா என சந்தேகம் எழுந்துள்ளது.
கேரள மாநில அரசு இதுவரை தமிழக முட்டை மற்றும் தீவனங்கள் உள்ளே செல்ல அனுமதித்து வருகிறது. இது தடைபடுமா என கேரளா அரசு அறிவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதேநிலை தொடர்ந்து நீடித்தால் தமிழகத்தில் முட்டை விலை குறைந்து முட்டை தேக்கம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
தமிழகத்தில் சுமார் 5 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி 4 கோடிக்கும் மேற்பட்ட முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து கோடிக்கணக்கான முட்டைகள் மற்றும் கோழிகள் விற்பனைக்காக கேரளாவிற்கு, லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
முட்டை மற்றும் கோழி விற்பனை பாதிப்பு ஏற்பட்டால், தமிழகத்தில் கோழிப்பண்ணைத் தொழிலில் பாதிப்பு உருவாகி பெரும் பணம் நஷ்டம் ஏற்படும் என்று கோழிப்பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.