கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் புறநகரில் அமைந்துள்ள அத்திங்கல் பகுதியில் வசித்து வருபவர் மணிக்குட்டன். இவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் அத்தையுடன் வசித்து வந்தார். தனது வீட்டின் அருகில் ஒரு சிறிய ஹோட்டல் நடத்தி வந்த இவர், சமீபத்தில் தான் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கினார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இவரது ஹோட்டலுக்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சோதனை செய்து மணிக்கூட்டனுக்கு ரூ.50,000 அபராதம் விதித்ததோடு, ஹோட்டலையும் தற்காலிகமாக மூடினர். இதனால், மணிக்கூட்டன் பெரும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் ஹோட்டலை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்த நிலையில், ஹோட்டல் ஊழியர் ஒருவர் இவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, அவரது வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மணிக்குட்டன், அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதைத்தொடர்ந்து குடும்பத்தில் இருந்த மற்றவர்களை தேடும்போது, அவர்கள் 5 பேரும் விஷம் அருந்தி மற்ற அறையில் உள்ள தரையில் விழுந்து கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர், உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டில் இறந்து கிடந்த 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவீர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணிக்குட்டனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அவர் தற்போது மிகுந்த பொருளாதார நெருக்கடியில் உள்ளதாகவும், எனவே நிறைய கடன் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து மணிக்குட்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. எனினும் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.