குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் சோஹில் சுபேதார் சிங், இவருடைய நண்பர் ரமேஷ் சந்திர உபாத்யாய்.
ரமேஷ் சந்திர உபாத்யாய் ஒரு தனியார் பள்ளியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றார். சுபேதாருடன் இவர் அறை எடுத்து தங்கி வந்தார். மேலும் இரவில் தாமதமாக வரும் சுபேதார் அறை கதவை திறக்க வேண்டும் என்று சொல்லி பலமாக தத்தியதாகவும் மிகப்பெரிய சத்தத்துடன் கதவை மூடியதாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து நண்பர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானதில், அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, சுபேதார் கடுமையாக தாக்கியதில் ரமேஷ் சந்திர உபாத்யாய் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
இதனால் பயந்து போன சுபேதார் நண்பருடைய உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல தூக்கிக்கொண்டு ஓடினார். அவர் தூக்கிக்கொண்டு ஓடிய காட்சி அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, இணையதளத்தில் வேகமாக பரவியது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் வெளியாகினர்.
அதாவது சுபேதார் தாக்கியதால் உபாத்யாய் பரிதாபமாக உயிரிழந்தார் எனவும், நண்பர் உயிரிழந்தது தெரியாமல் அவருடைய சடலத்தை தூக்கிக்கொண்டு சுபேதார் சாலையில் பதற்றத்துடன் சென்றுள்ளார் என்றும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சுபேதாரை கைது செய்த காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் சுபேதாரிடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.