பிரதமர் மோடியை நேரில் சென்று வரவேற்காத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முடிந்தால் தனது ஆட்சியை கவிழ்க்கட்டும் என்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சவால் விடுத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் வந்த பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேரில் வரவேற்கவில்லை. சந்திரசேகர ராவ்வின் இந்த செயலுக்கு பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சந்திரசேகர ராவ் ஏன் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை என்றும், விரைவில் காவி, தாமரைக் கொடி தெலங்கானாவில் பறக்கும் என்றும் மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் கூறினார். இதற்கிடையே, பாஜக மற்றும் பிரதமர் மோடியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை சந்திரசேகர ராவ் எழுப்பியுள்ளார். அதன்படி, விவசாயிகள் நலனுக்காக கொண்டு வரப்பட்டதாக பாஜக அரசு கூறிய வேளாண் சட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு திரும்பப் பெற்றது ஏன் எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
Make in India திட்டத்தின் கீழ் எத்தனை வேலைவாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது என்ற புள்ளி விவரங்களை பிரதமர் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ள சந்திரசேகர ராவ், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்புப் பணத்தின் அளவு பிரதமர் மோடியின் பதவிக் காலத்தில் 2 மடங்காக அதிகரித்துள்ளதாக விமர்சித்தார். மகாராஷ்ட்ராவைப் போல் தெலங்கானாவிலும் ஆட்சி மாற்றம் நடக்கும் என பாஜகவினர் கூறி வருவது தொடர்பாக பேசிய சந்திரசேகர ராவ், முடிந்தால் ஆட்சி மாற்றத்தை நடத்திக் காட்டுங்கள் என சவால் விடுக்கும் தொணியில் பேசினார்.