இரட்டை சகோதரிகள் ஒரே வாலிபரை திருமணம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை அந்தேரியை சேர்ந்தவர் அதுல் உத்தம். இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். காந்திவலியை சேர்ந்தவர்கள் பிங்கி, ரிங்கி. இரட்டையர்களான இந்த சகோதரிகள், தகவல் தொழில் நுட்பத்துறையில் பொறியியல் படிப்பு படித்துவிட்டு ஒரே கம்பெனியில் வேலை செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையர்களின் தந்தை இறந்து போனார். இதையடுத்து, இருவரும் தாயாரின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தனர். அப்போது, அவர்களின் தாயார் விபத்தில் சிக்கிய போது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருவதில் அதுல் உத்தம், உதவினார். இதனால், அதுலுக்கு இரட்டை சகோதரிகளுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. சகோதரிகள் இரண்டு பேரும் அதுலை திருமணம் செய்ய விரும்பினர். அவர்கள் தாயாரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்களின் சொந்த ஊரான சோலாப்பூர் அருகில் உள்ள அக்லுஜ் என்ற இடத்தில் இருக்கும் ஹோட்டலில் உறவினர்கள் புடைசூழ திருமணம் நடைபெற்றது. இத்திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து சமூக சேவகர் ராகுல் என்பவர், இதுகுறித்து போலீஸில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர்கள் விசாரித்து வருகின்றனர். சட்டத்தை மீறி இரண்டு பேர் ஒரே வாலிபரை திருமணம் செய்தது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில பெண்கள் கமிஷன் தலைவர் ரூபாலி சோலாப்பூர் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையே, மணமகனின் உறவினர் ஒருவர் கூறுகையில், ”சகோதரிகள் இரண்டு பேரும் சின்ன வயதில் இருந்தே அனைத்தையும் ஒன்றாக பகிர்ந்து கொண்டனர். ஒரே பள்ளி, கல்லூரியில் படித்தது வேலை செய்வது உட்பட அனைத்தையும் சேர்ந்தே செய்கின்றனர். திருமணம் தங்களை பிரித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இருவரும் ஒருவரையே திருமணம் செய்து கொண்டனர்” என்றார். முதலில் இரண்டு சகோதரிகளில் ஒருவருக்குத்தான் அதுல் மீது காதல் ஏற்பட்டது. ஆனால், திருமணம் செய்தால் எங்கள் இரண்டு பேரையும் சேர்த்தே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவர் அதுலிடம் சொன்னார். அதுலும் தனது பெற்றோரிடம் கேட்டு அதற்கு சம்மதம் தெரிவித்தார் என்கிறார்கள் உறவினர்கள்.