நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. காவல் நிலையங்கள் இருந்தாலும் திருட்டு சம்பவங்களை நிறுத்த முடிவதில்லை. அந்த விதத்தில் மத்திய பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு ஆலயத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆனாலும் இந்த சம்பவம் ஒரு சுவாரசியமான நகர்வை கொண்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் பனிஹர் என்ற கிராமத்தில் இருக்கின்ற ஜெயின் ஆலயத்தில் ஒரு திருடன் திருடுவதற்காக நுழைந்திருக்கிறான். அப்போது அந்த திருடன் அங்கு இருந்த தெய்வ சிலைகளை வணங்கியதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர், அந்த கோவிலில் வைக்கப்பட்டிருந்த 6 உலோக சிலைகள், 2 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் இருந்த உண்டியல் போன்றவற்றை அந்த திருடன் எடுத்துச் சென்றுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதே போல் ஒரு திருட்டு சம்பவம் சென்ற மாதம் நடைபெற்றுள்ளது. அதாவது, மத்திய பிரதேச மாநிலத்தில் பாலாகாத் மாவட்டத்தில் இருக்கின்ற லம்தா என்ற காவல் நிலைய கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கின்ற சாந்திநாத் திகம்பர் ஜெயின் கோவிலில் வெள்ளி மற்றும் வெங்கலத்தாலான 10 அலங்கார பொருட்களை திருடி சென்ற திருடன், அவனுடைய செயலுக்காக தானே வருத்தமுற்று தான் திருடியதற்கான மன்னிப்பு கடிதத்துடன், தான் திருடிய பொருட்கள் அனைத்தையும் அந்த இடத்திலேயே வைத்துவிட்டு சென்றிருந்தான்.
அந்த திருடன் எழுதி இருந்த கடிதத்தில் என்னை மன்னித்து விடுங்கள், நான் அறியாமல் ஆலயத்தின் பொருட்களை எடுத்து விட்டேன். அதன் காரணமாக நான் பல துன்பங்களை அனுபவித்து விட்டேன் என்று குறிப்பிட்டிருந்தான்.