கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தொற்றுநோய் சட்டத்தில் கேரள அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி அடுத்த ஒரு ஆண்டுக்கு கோவிட் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக் அதிகரித்து வருவதால், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. ‘கேரள நோய்த்தொற்று, கோவிட் 19 கூடுதல் வழிமுறைகள் 2020’ என்ற பெயரில் அவரச சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி, இந்த புதிய வழிமுறைகள் 2021 ஜூலை மாதம் வரை அமலில் இருக்கும். அதாவது அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை பொதுமக்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, அதிகளவில் கூடுவதை தவிர்ப்பது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது ஓராண்டுக்கு கட்டாயமாக்கி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு கேரள தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் விதிமுறைகளை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று மாநில அரசு கூறியுள்ளது.
மாஸ்க் கட்டாயம் :
பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். எந்த வகை போக்குவரத்தை பயன்படுத்தினாலும் மாஸ்க் அணிவது கட்டாயம்.
சமூக விலகல் :
பொது இடங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்கள் 6 அடி சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
திருமண விழாக்கள் :
திருமண விழாக்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும், அதிகபட்சம் 50 பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடது. அதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அனைவரும், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பவர்கள், அனைவருக்கும் சானிடைசர் வழங்க வேண்டும்.
இறப்பு நிகழ்ச்சிகள் :
இறப்பு நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது. அதில் பங்கேற்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஒருவேளை கோவிட் 19 மரணம் என்று சந்தேகம் இருந்து மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
போராட்டங்கள் :
போராட்டங்கள், ஊர்வலங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டங்கள் ஆகிய எதுவும் சம்மந்தப்பட்ட துறையின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி நடத்தப்பட கூடாது. இதுபோன்ற சமூக ஒன்று கூடலில், 10 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது. அதில் பங்கேற்பவர்களும் மாஸ்க் அணிய வேண்டும், 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
கடைகளுக்கான வழிமுறை :
கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் ஒரே நேரத்தில் 20 பேருக்கு மேல் இருக்க கூடாது. வாடிக்கையாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும், சமூக விலகலை பின்பற்ற வேண்டும். கடை உரிமையாளர் சானிடைசர் வழங்க வேண்டும்.
எச்சில் துப்ப தடை :
பொதுஇடங்கள், சாலைகள், நடைபாதைகளில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 ஜகர்தா :
மற்ற மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வரும் மக்கள், அரசின் ‘கோவிட் 19 ஜகர்தா’ என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பிற தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவேண்டும்.
போக்குவரத்துக்கு தடை :
மாநிலங்களுக்கு இடையேயான சாலை போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.