தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 78,000-ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாகவே, 2,500-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் 3-வது நாளாக இன்றும் 3,500 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் இன்று புதிதாக 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78,335- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,939 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51,629-ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 1,774 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 248 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. மதுரையில் ஒரே நாளில் 218 பேருக்கும், கொரோனா தொற்று உறுதியானதால், திருவள்ளூரில் 146 பேருக்கும், வேலூரில் 118 பேருக்கும், ராமநாதபுரத்தில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இன்று மட்டும் 68 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 1025-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,737 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44,094-ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.