அரபிக் கடலில் உருவாகி உள்ள நிசர்கா புயல், தீவிர புயலாக வலுப்பெற்று இன்று மதியம் மும்பைக்கு அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் உருவாகி உள்ள நிசர்கா புயல், தீவிர புயலாக வலுப்பெற்று மகாராஷ்டிரா – குஜராத் இடையே, மும்பைக்கு 100 கி.மீ தொலைவில் உள்ள அலிபௌக் என்ற பகுதியில், இன்று மதியம் கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன், கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் 6 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எனவே மும்பை, தானே, ராய்காட், பால்கர், நவ்சரி, சூரத், பவநகர், உள்ளிட்ட கடலோர மாவட்டங்களையும், தாதர் நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ யூனியன் பிரதேசங்களிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அந்த மாநிலங்களில் தயார் நிலையில் உள்ளனர். கடலோர மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 78,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை முதலே மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனிடையே மகாராஷ்டிரா மற்றும் குஜராத் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று பேசினார். அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் மகாராஷ்டிர மக்களிடம் நேற்று உரையாற்றிய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மற்ற புயல்களை காட்டிலும் நிசர்கா புயல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தினார். புயல் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அடுத்த 2 நாட்களுக்கு யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் எனவும், மழை அதிகமானால் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் மக்கள் மின் சாதன பொருட்களை கூடுதல் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். கடந்த 1882க்கு பிறகு, அதாவது 138 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையை புயல் தாக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.