அரபிக் கடலில் உருவான ‘ நிசர்கா ‘ புயல் மகாராஷ்டிர மாநிலம் அலிபாக் அருகே கரையை கடந்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்தது. பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று அது மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இதற்கு, நிசர்கா என பெயர் சூட்டப்பட்டது.

இந்த புயல், இன்று பிற்பகல் 1 மணியளவில், மும்பையில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள அலிபாக் என்ற இடத்தில் இருந்து கரையை கடக்க துவங்கியது. அப்போது, அந்த இடத்தில் மணிக்கு 93 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. மும்பை கடற்கரையை மணிக்கு 100 முதல் 110 கி.மீ., வேகத்தில் வீசி , புயல் கடந்ததாகவும், வானிலை மையம் தெரிவித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில கடற்கரைகளில் 40 தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். மஹாராஷ்டிராவில் மட்டும் 40 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது, காற்றின் வேகம் குறைய தொடங்கியுள்ளதால், கொரானாவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மும்பை நகரம், பெரிய பாதிப்பில் இருந்து தப்பித்துள்ளது. அந்த நகரத்தில் மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதால், தற்போது வரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இரவு 7 மணி வரை மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா தவிர்த்து, குஜராத், டையூ டாமன், தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய பகுதிகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டன. இந்நிலையில், ஏற்கனவே கொரானா தொற்றால் பெரும் பாதிப்பை சந்துத்துள்ள மும்பை மாநிலத்தில் இந்த புயலால் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படாதது அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.