தெலங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும் கூட கல்வி நிலையங்கள் ஜூலை மாதங்களுக்கு பிறகே திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இதனால் நாட்டின் பல மாநிலங்களிலும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நடந்த தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக பல மாநிலங்களில் இன்னும் குழப்பமான நிலையே நீடிக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த அவசரம் காட்டுவது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஆனால் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என்பதால், இப்போது தேர்வு நடைபெறவில்லை என்றால், பிறகு நடத்தவே முடியாது என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. இந்த சூழலில் பொதுத் தேர்வு தொடர்பாக, தெலங்கானா அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு மற்ற மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.