கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராம்லு, மாஸ்க் அணியாமலும், சமூக விலகலை பின்பற்றாமலும்,திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் ஹடகலி தொகுதி எம்.எல்.ஏ பி.டி பரமேஷ்வர் நாயக்கின் மகனின் திருமணம் இன்று நடைபெற்றது. தேவங்கரே மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மிபுராவில் நடைபெற்ற திருமணத்தில் அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அந்த திருமண விழாவில், அம்மாநில சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராம்லு மாஸ்க் அணியாமலும், சமூக விலகலை பின்பற்றாமலும் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிடுவது இது முதன்முறையல்ல.. கடந்த 2-ம் தேதி, சித்ரதுர்கா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சருக்கும், மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று மீண்டும் கொரோனா விதிகளை மீறி நடைபெற்ற திருமண நிகழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருமண விழாவில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் ஜி பரமேஷ்வரா மற்றும் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆளுங்கட்சியான பாஜகவில் இருந்து அமைச்சர்கள் லக்ஷ்மன் சாவடி மற்றும் பிரபு சாவன் ஆகியோரு கலந்துகொண்டனர்.
கொரோனா நெருக்கடி காலத்தில், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் எப்படி இதுபோன்ற மிகப்பெரிய கூட்டத்திற்கு அனுமதி வழங்கியது என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் இதுவரை இந்த திருமண நிகழ்ச்சிக்கு எதிராக எந்த புகாரும் அளிக்கப்படாததால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.