வடகிழக்கு மாநிலங்களில் இடைவிடாது பெய்யும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சூப்பர் புயலான அம்பன் புயல் கடந்த வாரம் வலுவிழக்க தொடங்கியதில் இருந்தே அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அசாமில் மட்டும் 1000 ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. சுமார் 1.95 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோல்பரா தின்சுகியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அபாய அளவை தாண்டி ஓடுகிறது.

அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் 350க்கும் மேற்பட்ட கிராமங்கள் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 தினங்களாக இடைவிடாது தொடர்ந்து பெய்த மழையால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இடாநகரில் உள்ள அர்ஸூ கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் 3 பேர் உயிரிழந்ததற்கு அருணாச்சல பிரதேச முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ. 4 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார். இடைவிடாத மழை பெய்து வருவதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.