குஜராத்தில் ஒரு வயது சிறுமியின் தலையில் சிக்கிய குக்கர் நீண்ட நேர போராட்டத்திற்கு கட்டர் கருவி கொண்டு வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது.

குஜராத் மாநிலம் பாவ்நகரில் வசிக்கும் ஒருவரின் ஒரு வயது மகள் வீட்டில் விளையாடும்போது, சமையல் அறையில் இருந்த பிரஷர் குக்கரை ஹெல்மெட் என நினைத்து தலையில் மாட்டிக் கொண்டு விளையாடி உள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் தலையில் மாட்டியிருந்த குக்கரை வெளியே எடுக்க முடியாமல் சிறுமி கூச்சலிட்டு அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களால் முடிந்தளவு போராடி சிறுமியின் தலையில் சிக்கியிருந்த குக்கரை அகற்ற முயன்றுள்ளனர். ஆனால், சிறுமி அழுது கத்தியதால், பெற்றோர் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்தனர். ஆனால் தலையில் சிக்கிய குக்கரை வெளியே எடுக்க முடியவில்லை. எலும்பியல் முதல் குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். அவர்களும் தங்களால் முடிந்தவரை குக்கரை லாவகமாக எடுக்க முயற்சித்தனர். ஆனால் சிறுமியின் தலையில் சிக்கிய குக்கரை அகற்ற முடியவில்லை. சோர்ந்துபோன மருத்துவர்கள், நீண்ட போராட்டத்திற்கு பின் ஒரு ‘கட்டர்’ இயந்திர உதவியுடன் குக்கரை வெட்டி, குழந்தையின் தலையை வெளியே எடுத்தனர்.