
சென்னையிலிருந்து கொரோனா பயத்தின் காரணமாக சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்து வருவதால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனக்கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரொனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் வாழும் வெளி மாவட்ட மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படவுள்ளதால் சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு காரில் பயணித்து வருகின்றனர்.

இதன் காரணமாக, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் பல மணி நேரமாக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றனர். இதனால் அனைத்து வாகனங்களிலும் சுங்கக்கட்டணத்தை வசூலிக்க முடியாமல் ஊழியர்கள் திணறிவந்தததையடுத்து, பரனூர் சுங்கச்சாவடியில் தற்காலிகமாக சுங்கக்கட்டணத்தை ரத்து செய்து காவல்துறை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.