சளி, காய்ச்சல் மருந்து என்று உரிமம் பெற்று விட்டு, ‘கொரோனா மருந்து’ என விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் பல நாடுகள் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சூழலில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்துள்ளதாக, பாபா ராம் தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா லிமிட்டெட் நிறுவனம் நேற்று அறிவித்தது.
இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா “ கொரோனா பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேலான நோயாளிகளுக்கு கொரோனில் என்ற இந்த ஆயுர்வேத மருந்து கொடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் 100 சதவீதம் நோயில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கொரோனா நோய் தொற்று இருப்போர் இந்த ஆயுர்வேத மருந்தை எடுத்துக் கொண்டதன் மூலம் 5 முதல் 14 நாட்கள் என்ற அளவில் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, பதஞ்சலி நிறுவனத்தின்மருந்தான கொரோனில் குறித்து தகவல்களை அளிக்க வேண்டும் எனவும், அதுபற்றிய விளம்பரங்கள் செய்ய வேண்டாம் எனவும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் கேட்டுக் கொண்டது. மேலும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் புதிதாக கண்டுபிடித்த மருந்தின் பெயர், மூலக்கூறுகள், கோவிட்-19 சிகிச்சை ஆய்வு/ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இடங்கள்/மருத்துவமனைகள், அதற்கான ஒப்பந்தங்கள், விதிமுறைகள், ஆய்வு மாதிரி அளவு உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் வழங்க வேண்டும் எனவும் பதஞ்சலி நிறுவனத்தை ஆயுஷ் அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய உத்தரகண்ட் மாநில ஆயுர்வேத நிறுவனத்தின் உரிமம் வழங்கும் அலுவலர் “ பதஞ்சலி நிறுவனம் அளித்த விண்ணப்பத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து எனக் குறிப்பிடவில்லை. சளி மற்றும் காய்ச்சல் மருந்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து என்று தான் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த அடிப்பையில் தான், அவர்களுக்கு உரிமம் வழங்கினோம். கோவிட் 19 சிகிச்சக்கான மருந்து என எப்படி அவர்கள் உரிமம் பெற்றார்கள் என்பதை விளக்கக்கோரி அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.