மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபரை மர்ம நபர்கள், சிகிச்சை அறைக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன், கடந்த 5-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்து காரணமாக கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அதிகாலை சமயத்தில் முருகனுக்கு துணையாக இருந்த அவரது மனைவி தேநீர் வாங்க வெளியே சென்ருள்ளார். அப்போது, முருகன் சிகிச்சை பெறும் சிகிச்சை அறைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு முருகனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகனுக்கு , உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்த மர்ம கும்பல் குறித்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கொலை செய்யப்பட்ட முருகனுக்கு பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.