மனைவி உயிரிழந்த நிலையில் இரண்டு மாதங்களாக 6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஷியாமளா என்பவர் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு ஆன் லைனில் புகாரளித்தார். அதில் கூறியிருப்பதாவது, எனக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். மூத்த மகளை சந்தோஷ் பிரேம்குமார் என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தேன்.
அவர்களுக்கு 11 வயதில் மகனும் 6 வயதில் மகளும் உள்ளனர். இந்தச் சூழலில் கடந்த மார்ச் 3-ல் என் மூத்த மகள் உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டாள். அவளின் சடலத்தை சென்னைக்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தோம். பின்னர் என்னுடைய பேரன், பேத்தி மற்றும் மருமகன் ஆகியோர் சென்னையில் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பேத்திக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அதனால் அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றபோது அவளை பரிசோதித்த மருத்துவர்கள், பேத்திக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு மருந்து மாத்திரைகளைக் கொடுத்தனர். அப்போது பேத்தியைப் பரிசோதித்தபோது அவளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்த தகவல் தெரியவந்தது. அதுகுறித்து பேத்தியிடம் விசாரித்தபோது அப்பா சந்தோஷ் பிரேம்குமார் மீது குற்றம் சுமத்தினார். எனவே, என்னுடைய மருமகன் சந்தோஷ் பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின்பேரில் துணை கமிஷனர் ஜெயலட்சுமி நடவடிக்கை எடுக்கும்படி புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த தகவலின்படி சிறுமியின் தந்தை சந்தோஷ் பிரேம்குமாரிடம் விசாரணை நடத்தியபோது அவர் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சந்தோஷ் பிரேம்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீஸார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், மனைவி உயிரிழந்த பிறகு மாமியார் வீட்டின் முதல் மாடியில் சந்தோஷ் பிரேம்குமார் தனது மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். சிறுமியின் அப்பா ஹைதாராபாத்தில் பிசினஸ் செய்து வருகிறார். ஊரடங்கு என்பதால் அனைவரும் வீட்டிலேயே இருந்துவருகின்றனர்.
கடந்த 2 மாதங்களாக மகளிடம் அவர் தவறாக நடந்துள்ளார். விவரம் அறியாத 6 வயதுச் சிறுமி யாரிடமும் சொல்லவில்லை. உடல் வலி, காய்ச்சலால் அவதிப்பட்ட பிறகுதான் சிறுமிக்கு நடந்த கொடுமை மருத்துவர்கள் மூலம் வெளியில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டு அவரின் பாட்டியிடம் ஒப்படைத்துள்ளோம். சந்தோஷ் பிரேம்குமாரிடம் விசாரித்தபோது அவரால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை” என்றனர்.